மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பனிப்பொழிவு
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதில் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.
தற்போது குற்றாலம் பகுதியில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. காலையில் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் தெரியாத அளவில் பனி மூடி காணப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
நேற்று காலை 9.30 மணி அளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் படிகளில் யாரும் நடந்து செல்ல முடியாத அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தை வியப்புடன் பார்த்து சென்றனர். பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்ற அருவிகளுக்கு சென்று குளித்தார்கள்.
Related Tags :
Next Story