சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்
சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை, குமரகிரி ஏரி, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக சாலையோரம் சிட்டுக்குருவிகளை கூண்டில் அடைத்து வைத்து அதை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் சுப்பிரமணி, வனக்காப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் நேற்று காலை சேலம் குமரகிரி ஏரிப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் ஒருவர் சிட்டுக்குருவிகள் விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 50) என்பது தெரிந்தது.
பின்னர் சிட்டுக்குருவிகளுடன் அவரை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வயல்களில் வலை விரித்து சிட்டுக்குருவிகளை பிடித்து வந்து ஒரு குருவி ரூ.100-க்கு விற்பனை செய்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருந்த 20 சிட்டுக்குருவிகளை பறிமுதல் செய்து அதை வனப்பகுதியில் விட்டனர். பின்னர் அவருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது குறித்து வனச்சரகர் சுப்பிரமணியிடம் கேட்ட போது, ‘இந்திய வனச்சட்டப்படி பறவைகள் விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பறவைகள் விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை கைது செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story