மீனம்பாக்கத்தில் மின்சார ரெயிலில் எந்திரக்கோளாறு; பயணிகள் கடும் அவதி


மீனம்பாக்கத்தில் மின்சார ரெயிலில் எந்திரக்கோளாறு; பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

மீனம்பாக்கத்தில் மின்சார ரெயிலில் எந்திரக்கோளாறு காரணமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே அரை மணிநேரம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று காலை 8.15 மணிக்கு மின்சார ரெயில் பயணிகளுடன் புறப்பட்டு வந்தது. மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர், மின்சார ரெயிலை மெதுவாக இயக்கி மீனம்பாக்கம் ரெயில் நிலையம் கொண்டுவந்து நிறுத்தினார்.

இதுபற்றி தாம்பரம் ரெயில்வே பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ரெயில்வே ஊழியர்கள், மீனம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து, மின்சார ரெயிலில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் அவதி

இதனால் அந்த மின்சார ரெயிலில் இருந்த வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். சிலர் மின்சார ரெயிலில் இருந்து இறங்கி, மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.

என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு காலை 8.50 மணியளவில் அந்த மின்சார ரெயில் மீனம்பாக்கத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதனால் இந்த மின்சார ரெயிலுக்கு பின்னால் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. அரை மணிநேரத்துக்கும் மேலாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

Next Story