அச்சரப்பாக்கத்தில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மறியல் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அச்சரப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கட்டுமான பணிகளுக்கு எடுத்து செல்லும் எம்.சாண்ட் மணல் லாரிகளை வருவாய்த்துறையினர் மடக்கி பிடித்து அச்சரப்பாக்கம் அருகே நிறுத்தி சோதனை செய்து வந்தனர்.
எம்.சாண்ட், மணல் சோதனை செய்யப்பட்டன. இந்த நிலையில் நாட்கள் பல கடந்தும் லாரிகள் விடுவிக்கப்படாததால் லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள், கிளனர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
உடனடியாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்.சுரேந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடநத்தினர். உடனே மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
லட்ச கணக்கில் நஷ்டம்
சோதனை என்ற பெயரில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளன.
இதனை அதிகாரிகளா? தருவார்கள் என லாரி டிரைவர்கள் ஆவேசப்பட்டனர். பின்னர் நேற்று மாலை முதல் லாரிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே குவிந்தனர். சுங்கச்சாவடியில் மணல் லாரிகள் சோதனை செய்யப்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மதுராந்தகம் ஆர்.டி.ஓ மாலதி, தாசில்தார் பர்வதம், மதுராந்தகம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எம்.சாண்ட் மணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள லாரிகளும் அடுத்தடுத்து சரிபார்த்த பின் விடுவிக்கப்படும் என்று கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story