நெல்லையில் துணிகரம்: சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லையில் துணிகரம்: சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லையில் சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி மாணிக்கம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வேலாயுதம் (வயது 37). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார். இதனால் வேலாயுதத்தின் தாயார் கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தாய் தனியாக இருப்பதால் வேலாயுதம் சென்னையில் பணியாற்றிய வேலையை விட்டு விட்டு நெல்லைக்கு வந்து விட்டார். பின்னர் அவர் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்தார்.

35 பவுன் நகை

கடந்த 2-ந் தேதி உறவினர் ஒருவரை பார்க்க கல்யாணியுடன் வேலாயுதம் சென்னை சென்று விட்டார். இந்த நிலையில் வேலாயுதம் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 40-க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள், ரூ.70 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் வேலாயுதம் அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு, சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரு வாரத்துக்கு முன்பு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதாவது வேலாயுதம் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, பணம், பொருட்களின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைரேகை நிபுணர்கள் வந்து, வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் ‘புளூட்டோ‘ வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு, மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நெல்லையில் சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story