தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் மேலும் 10 பேர் வாக்குமூலம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் மேலும் 10 பேர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:00 AM IST (Updated: 20 Dec 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் மேலும் 10 பேர் வாக்குமூலம் அளித்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் மேலும் 10 பேர் வாக்குமூலம் அளித்தனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் ஏற்கனவே 5 கட்டங்களாக விசாரணை நடத்தியது. அப்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்பட மொத்தம் 87 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 10 பேர் வாக்குமூலம்

கடந்த 17-ந் தேதி 6-ம் கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி நடந்து வந்தது.

கடந்த 2 நாட்களாக 11 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று 3-வது நாளாக விசாரணை நடந்தது.

அப்போது ஜெயிலில் இருந்து வந்தபோது, கலவர தாக்குதலில் இறந்ததாக கூறப்பட்ட தாளமுத்துநகரை சேர்ந்த பாரத்ராஜா என்பவரின் உறவினர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் போராட்டக்காரர்களிடம் விசாரணை நடந்தது.

நேற்று 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 10 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். கடந்த 3 நாட்களில் மொத்தம் 21 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story