சேலத்தில் பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை
சேலத்தில் தீக்குளித்து பிளஸ்–1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
சேலம் அழகாபுரம் மோலப்பட்டியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், சின்னக்கடைவீதியில் எலுமிச்சை பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் சிந்து (வயது 15). பிளஸ்–1 மாணவியான இவர், சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று காலையில் மாணவி சிந்து வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவரது பெற்றோர் யாரும் இல்லை.
இந்தநிலையில், பிற்பகல் 3 மணியளவில் ஏழுமலையின் வீட்டில் இருந்து திடீரென மளமளவென புகை வெளியேறியது. அவரது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அவரது வீட்டின் கதவை உடைத்து எட்டி பார்த்தனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த ஷோபாவில் மாணவி சிந்து அமர்ந்தபடி உடல்கருகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், மாணவி சிந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பின்னர், உடல்முழுவதும் கருகிய நிலையில் மாணவி சிந்து, ஷோபாவில் அமர்ந்தபடி சிறிதுநேரத்தில் உயிரிழந்து இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மாணவி சிந்து தற்கொலைக்கான காரணம் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு வீட்டில் கடிதம் ஏதேனும் எழுதி வைத்திருந்தாரா? என்பது பற்றியும், தற்கொலை செய்வது குறித்து அவருடன் படிக்கும் நெருங்கிய தோழிகளிடம் ஏதாவது சொல்லியிருந்தாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.