கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலி காதலியுடன் மடாதிபதி கைது கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற சதி்


கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலி காதலியுடன் மடாதிபதி கைது கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற சதி்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான சம்பவம் கர்நாடகத்தையே உலுக்கியது.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான சம்பவம் கர்நாடகத்தையே உலுக்கியது. கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற சதி செய்து பிரசாதத்தில் விஷம் கலந்த தாக மடாதிபதி தனது காதலியுடன் அதிரடியாக நேற்று கைது செய்யப் பட்டார். அவர்களோடு மேலும் 2 பேரும் கைதானார்கள்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது.

7 பேரிடம் விசாரணை

கடந்த வாரம் இந்த கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மைசூரு கே.ஆர்.ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 26 பேரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

மாரம்மா கோவிலை நிர்வகிப்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததாக முதலில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவரது மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை ஹனூர் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இளைய மடாதிபதி...

இந்த நிலையில் நேற்று முன்தினம் 15 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி அம்பிகா என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கொள்ளேகால் டவுனில் உள்ள சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி இம்மாடி மகாதேவசாமிக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக இளைய மடாதிபதி கூறியதால் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததாகவும் அம்பிகா கூறினார். இதையடுத்து அம்பிகாவை போலீசார் கைது செய்தனர்.

அதனைதொடர்ந்து நேற்று காலை சாளூர் மடத்திற்கு சென்ற போலீசார் இளைய மடாதிபதி இம்மாடி மகாதேவசாமியிடம் இதுபற்றி விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது சாளூர் மடத்தின் தலைமை மடாதிபதியான குருசாமிக்கும், இளைய மடாதிபதியான மகாதேவசாமிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதோடு மாரம்மா கோவில் நிர்வாகத்தை கைப்பற்றி தனது கள்ளக்காதலிக்கு கொடுக்க இளைய மடாதிபதி மகாதேவசாமி விரும்பி உள்ளார். அதனால் சாளூர் மடத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதே நேரத்தில் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றி காதலிக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பிரசாதத்தில் விஷம் கலக்க சதி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இளைய மடாதிபதி மகாதேவசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு மேட்டூரை சேர்ந்த தொட்டய்யா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா

கர்நாடகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து நேற்று சாம்ராஜ்நகரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் கடந்த 14-ந் தேதி கோவில் கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழா முடிந்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பக்தர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். சிலர் வாந்தி எடுத்து உடல்நலக்குறைவால் அவதி அடைந்தனர்.

15 பேர் பலி

இதுபற்றி உடனடியாக அப்பகுதி மக்கள் ராமாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட பக்தர்களை ராமபுரா, காமகெரே, கொள்ளேகால், சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சம்பவம் நடந்த நாளன்றே 11 பேர் பலியானார்கள்.

பின்னர் சிகிச்சை பலனின்றி 4 பேர் செத்தனர். இதுவரையில் இச்சம்பவத்தில் ஒரு பெண் குழந்தை, 5 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர்.

அறக்கட்டளை உறுப்பினர்...

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திரா குமார் மீனா தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவில் நிர்வாகி சின்னப்பிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலே இப்பிரச்சினைக்கு காரணம் என்று தெரியவந்தது. அதாவது இந்த கோவிலுக்கு என்று ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறக்கட்டளையின் உறுப்பினராக சின்னப்பி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இருந்துள்ளனர். மேலும் இக்கோவில் மற்றும் அறக்கட்டளை தலைவராக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி இருந்துள்ளார்.

கள்ளக்காதல்

இளைய மடாதிபதி மகாதேவசாமி மீது ஊழல், பாலியல் புகார் என பல்வேறு புகார்கள் எழவே, கோவில் முழுவதையும் சின்னப்பி கவனித்து வந்துள்ளார். வரவு-செலவு கணக்கையும் அவரே நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் சாளூர் மடத்திற்கு அடிக்கடி சென்று வந்த அம்பிகா என்பவருடன் இளைய மடாதிபதி மகாதேவசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

ஒரு கட்டத்தில் இளைய மடாதிபதி மகாதேவசாமி மாரம்மா கோவில் மேலாளராக தனது கள்ளக்காதலி அம்பிகாவின் கணவர்் மாதேசை நியமித்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து கோவில் மேற்பார்வையாளராக தனது கள்ளக்காதலியான அம்பிகாவை இளைய மடாதிபதி மகாதேவசாமி நியமித்திருக்கிறார்.

ஆசை காட்டி உள்ளார்

இவர்கள் இருவரும் கோவில் நிர்வாகத்தில் அதிக அளவில் தலையிட்டுள்ளனர். அது சின்னப்பி மற்றும் அவருடைய தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சின்னப்பியை கோவில் அறக்கட்டளையில் இருந்தும், நிர்வாக பொறுப்பில் இருந்தும் நீக்க கோரி இளைய மடாதிபதியை அவருடைய கள்ளக்காதலி அம்பிகா தூண்டி உள்ளார். அதாவது சின்னப்பியை கோவில் பொறுப்பில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட்டால், கோவில் நிர்வாகத்தை நாம் முழுமையாக கைப்பற்றி விடலாம் என்றும், அதன்பிறகு நாம் எப்போதும் சந்தோஷமாகவும், உல்லாசமாகவும் இருக்கலாம் என்றும் இளைய மடாதிபதிக்கு அவருடைய கள்ளக்காதலி அம்பிகா ஆசை காட்டி உள்ளார்.

அதன்பேரில் சின்னப்பியை பழிவாங்கவும், அவர் மீது பழி போடவும் இளைய மடாதிபதி, அவருடைய கள்ளக்காதலி அம்பிகா, அவருடைய கணவர் மாதேஷ் ஆகியோர் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

4 விஷ பாட்டில்கள்

இவர்களுடைய திட்டத்தில் மேட்டூரை சேர்ந்த தொட்டய்யாவையும் அவர்கள் சேர்த்து கொண்டனர். தொட்டய்யா மாரம்மா கோவில் அருகே நாக தேவதை சிலைகளை வைத்து பூஜை செய்து, மக்களிடம் பணம் வசூலித்து வந்தார். அதைப்பார்த்த சின்னப்பி அவரை, அங்கிருந்து விரட்டி விட்டார். இதனால் சின்னப்பியை பழிவாங்க தொட்டய்யா திட்டமிட்டிருந்தார். இதுபற்றி அறிந்த அம்பிகாவும், மாதேசும் தொட்டய்யாவை தங்களுடைய சதித்திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.

இவர்கள், 14-ந் தேதி அன்று கோவில் கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பிரசாதத்தில் விஷம் கலந்துவிட திட்டமிட்டனர். அதற்காக அம்பிகா சாம்ராஜ்நகரில் உள்ள விவசாயத்துறையில் வேலை பார்த்து வரும் தனது உறவினரிடம் இருந்து 4 பூச்சிக்கொல்லி மருந்து(விஷம்) பாட்டில்களை வாங்கி உள்ளார்.

கோவிலுக்கு சென்றனர்

இவர்கள் 4 பேரும் கோவில் கோபுரம் அடிக்கல் நாட்டு விழா அன்று பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம் கலந்து விடலாம் என்றும், அதில் பலர் உடல்நிலை பாதிக்கப்படுவார்கள் என்றும், அவ்வாறு நடந்துவிட்டால் கோவில் நிர்வாகம் சரியில்லை என்று கூறி சின்னப்பியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவில் நிர்வாகத்தை தாங்கள் கைப்பற்றி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் திட்டப்படி கடந்த 14-ந் தேதி கோவிலில் கோபுரம் கட்டுவதற்கான விழா நடந்துள்ளது. விழா முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க தயார் செய்யப்பட்டு இருந்தது. இந்த வேளையில் அம்பிகா, அவருடைய கணவர் மாதேஷ், தொட்டய்யா ஆகிய 3 பேரும் விஷ பாட்டில்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

தக்காளி சாதத்தில் கலந்தனர்

கோவிலுக்கு சென்றவுடன் அம்பிகா அங்கிருந்த நிர்வாகிகளின் கவனத்தை திசை திருப்பி உள்ளார். மேலும் சமையல் செய்யும் இடத்தில் இருந்தவர்களின் கவனத்தையும் திசை திருப்பி அங்கிருந்து அனுப்பி உள்ளார். பின்னர் மாதேசும், தொட்டய்யாவும் தங்களிடம் இருந்த விஷ பாட்டில்களை ஒரு வாளியில் ஊற்றி தண்ணீரில் கலந்துள்ளனர். பின்னர் அதை பக்தர்களுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தக்காளி சாதத்தில் கலந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் அம்பிகாவும் ஒன்றும் தெரியாததுபோல் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டார்.

முக்கிய துருப்புச்சீட்டு

சிறிது நேரத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த அம்பிகா ஒன்றும் அறியாததுபோல் உடனடியாக தனது செல்போனில் இருந்து போலீசாரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து தெரிவித்து இருக்கிறார். பின்னர் அவர் தங்களுடைய சதித்திட்டத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி விட்டதாக தனது கள்ளக்காதலனான இளைய மடாதிபதியை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார்.

அவரின் செல்போன் பேச்சுதான் போலீசாருக்கு முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது. முதலில் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்தாலும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தோம். ஆனால் அவருடைய நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தோம். அப்போதுதான் இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியே அம்பிகாதான் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தோம்.

மடாதிபதி கைது

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் இளைய மடாதிபதி மகாதேவசாமி, தொட்டய்யா ஆகியோரையும் கைது செய்தோம். இவ்வழக்கில் அம்பிகாவின் கணவர் மாதேசை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.”

இவ்வாறு போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா கூறினார்.

பரபரப்பு

கோவில் நிர்வாகத்தை கைப்பற்றும் பேராசை, கள்ளக்காதல், பழிவாங்கும் நடவடிக்கையால் 15 அப்பாவிகள் பலியாகி இருக்கிறார்கள். பிரசாதத்தில் விஷம் கலந்த சதியில் மடாதிபதி கள்ளக்காதலியுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story