கடனாக கொடுத்த பணத்தை திரும்பபெற முடியாததால் வாலிபர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை முயற்சி


கடனாக கொடுத்த பணத்தை திரும்பபெற முடியாததால் வாலிபர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 20 Dec 2018 3:32 AM IST (Updated: 20 Dec 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

நண்பரிடம் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வாலிபர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வம் மகன் தாமரைக்கனி(வயது 24). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திரும்பி வந்து ரெயிலில் சுண்டல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பிற்பகலில் தனது மனைவி முருகேஸ்வரி(21), மகள் கவிசுகலா(2), தாய் லதா(48) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகம் வந்து உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீக்குச்சியை பறித்ததுடன் உடல் முழுவதும் டீசல் ஊற்றப்பட்ட நிலையில் இருந்த தாமரைக்கனி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் பத்திரமாக அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் தாமரைக்கனி கூறியதாவது:– வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டு வந்த பணம் மற்றும் வியாபாரம் செய்து சேர்த்து வைத்த பணம் ஆகியவற்றை வைத்திருந்தேன். இந்த நிலையில் குடும்ப நண்பரான பாம்பன் காமராஜர் நகர் பெஞ்சமின் மகன் சீமான்அஜித்(24) என்பவர் தனது தங்கை வரதட்சணை கொடுமையில் சிக்கி இருப்பதால் பண உதவி தேவைப்படுவதாக கூறினார். அவருடைய சொந்த நிலத்தினை வைத்து கடன் பெற உள்ளதாகவும், வந்ததும் தந்துவிடுவதாகவும் கூறி ரூ.7 லட்சம் கடன் கேட்டார்.

நிலத்தை வைத்து பணம் வந்துவிடும் என்று கூறியதாலும், சொந்தமாக நாட்டுப்படகு வைத்து மீன்வியாபாரம் செய்வதால் நண்பரின் பேச்சை நம்பி கடந்த ஜூன் மாதம் ரூ.7 லட்சம் கடனாக கொடுத்தேன்.

இந்த பணத்தினை ஒருமாதம் கழித்து கேட்டபோது காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் பணத்திற்காக கொடுத்த காசோலையை வாங்கி வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து நான் எனது தாய் லதாவிடம் கூறியபோது அவரிடமும் நகை, பணம் போன்றவற்றை வாங்கியிருந்தது தெரியவந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் எனது மனைவி, மகள், தாய் ஆகியோருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் போலீசார் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இருதரப்பு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story