வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் இன்னும் சில தாலுகாக்கள் சேர்க்கப்படும் சட்டசபையில் குமாரசாமி அறிவிப்பு
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் இன்னும் சில தாலுகாக்கள் சேர்க்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் இன்னும் சில தாலுகாக்கள் சேர்க்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
ேகள்வி நேரத்திற்கு அனுமதி
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கூட்டம் கடந்த 10-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பிறகு வறட்சி தொடர்பாக நடைபெற்ற விவாதத்திற்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதிலளித்தார். அப்போது பல்வேறு உறுப்பினர்கள் எழுந்து, இன்னும் சில தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-
உன்னிப்பாக கவனித்தேன்
வறட்சி குறித்து 9 மணி நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. இங்கு உறுப்பினர்கள் பேசியதை நான் உன்னிப்பாக கவனித்தேன். இந்த கூட்டம் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பா.ஜனதா தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். உங்களின் கோரிக்கை என்ன? என்பது எனக்கு புரிகிறது. மழை பற்றாக்குறையால் கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளோம். அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் சில தாலுகாக்கள்
மக்கள் மற்றும் கால்நடை களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தாலுகாக்களில் வறட்சி நிலவுவதாக உறுப்பினர்கள் பேசினர். மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இன்னும் சில தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
அப்போது கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது:-
விதிமுறைகளின்படி...
வறட்சி தாலுகாக்களை அறிவிப்பதில் மாநில அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மத்திய அரசு இதற்கென்று வழிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளின்படி தான் வறட்சி பகுதிகள் அறிவிக்கப்படுகின்றன.
ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவது இல்லை. கர்நாடகத்தில் எவ்வளவு மழை பெய்கிறது என்பது குறித்த தகவல், மழை அளவீட்டு மையங்கள் மூலம் இயற்கை பேரிடர் மையத்திற்கு தானாகவே செல்கிறது.
தாலுகாக்களை வறட்சி...
நிலத்தின் ஈரப்பதம் குறித்த தகவல்களையும் அந்த பேரிடர் மையம் சேகரித்துக் கொள்கிறது. இவற்றை அடிப்படையாக வைத்து வறட்சி பகுதிகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தகவல்களை மீறி தாலுகாக்களை வறட்சி பட்டியலில் சேர்த்தால், அதை மத்திய அரசு நிராகரித்துவிடும்.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, மாநில அரசு, தன்னிச்சையாக செயல்பட்டு வறட்சி பகுதிகளை முடிவு செய்ய முடியாது என்றார்.
Related Tags :
Next Story