தேவகோட்டையில் அரசு அலுவலகங்களுக்கு படையெடுக்கும் பாம்புகள்; பணியாற்றும் அதிகாரிகள்


தேவகோட்டையில் அரசு அலுவலகங்களுக்கு படையெடுக்கும் பாம்புகள்; பணியாற்றும் அதிகாரிகள்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:50 AM IST (Updated: 20 Dec 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் உள்ள அரசு அலுவலகங்களில் பாம்புகள் புகுவதால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதை தடுக்க அந்த பகுதியில் உள்ள பழுதான லாரி மற்றும் இரும்பு குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை,

தேவகோட்டை ராம்நகரில் சப்–கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, நீதிபதிகள் குடியிருப்பு, தாசில்தார் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் உள்ள காலியிடத்தில் பழுதான லாரி ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு குழாய்கள் அதிக அளவில் பயன்பாடின்றி தரையில் போடப்பட்டுள்ளன.

பழுதான லாரி பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடப்பதாலும், இரும்பு குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பகுதி பராமரிப்பு இன்றி காணப்படுவதாலும் அந்த இடம் புதர் மண்டி உள்ளது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட வி‌ஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் பாம்புகள் கோர்ட்டு வளாகம், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் மற்றும் அங்கே உள்ள குழந்தைகள் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்குள் சென்று விடுகின்றன.

இதனால் அதிகாரிகளும், குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் அதிகாரிகள் அலறியடித்து வெளியே ஓடினர். பின்னர் அந்த பாம்பை அப்புறப்படுத்திய பின்பு அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் எந்த நேரத்தில் பாம்புகள் வருமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதேபோல் தூய்மை இந்தியா திட்டத்திற்காக தாலுகா அலுவலகத்தை சுத்தப்படுத்தும்போது முக்கிய ஆவணங்கள் வைக்கும் அறையில் பாம்புகள் இருந்தன. மேலும் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும் பாம்புகள் புகுவதால், அவர்கள் அச்சத்துடன் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் பாம்பு புகுந்து விடுமோ என்ற பயத்தில் அங்கன்வாடி மையத்தில் பகலிலும் கதவுகளை பூட்டி வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பாம்பு மற்றும் வி‌ஷப்பூச்சிகளின் புகலிடமாக இருக்கும் இரும்பு குழாய்கள் மற்றும் பழுதான லாரியை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story