ஜப்பான் சர்வதேச ரோபோடிக்ஸ் கண்காட்சியில் பங்கேற்று சாதனை இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கர்நாடக மாணவர்
ஜப்பானில் நடந்த சர்வதேச ரோபோடிக்ஸ் கண்காட்சியில் பங்கேற்று சாதித்து கர்நாடக மாணவர் ஒருவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஹலகூர்,
ஜப்பானில் நடந்த சர்வதேச ரோபோடிக்ஸ் கண்காட்சியில் பங்கேற்று சாதித்து கர்நாடக மாணவர் ஒருவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கர்நாடக மாணவன்
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே உள்ள நெட்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப்(வயது 19). இவர் ஜப்பானில் நடந்த சர்வதேச அளவிலான ரோபோடிக்ஸ் கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார் என்றால் நம்புவீர்களா?. ஆனால் அதுதான் உண்மை.
இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். படிப்பில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர், விஞ்ஞானத்திலும் அதிக ஆர்வமுடையவராக இருந்து வருகிறார்.
ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்பங்கள்
இவர் கல்லூரி படிப்பு ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்திற்கு தேவையான ‘‘செக்யூரிட்டி டெலிகிராபி, கிரிப்டோகிராபி இன் டிரோன் நெட்வொர்க்கிங் சிஸ்டம், டிரோன் இன் டிராபிக் மேனேஜ்மெண்ட்’’ போன்றவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன்மூலம் ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை கண்டறிந்துள்ளார். மேலும் ராணுவத்திற்கு ஏற்ற வகையில் ஒரு டிரோன் கேமராவையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் தற்போது பேசப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பை ஏற்கனவே சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரா சுவாமிகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்
இந்த நிலையில் இந்தியா சார்பில் இவருடைய கண்டுபிடிப்பு ஜப்பானில் கடந்த 29-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடந்த இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச ரோபோடிக்ஸ் கண்காட்சியில் பங்கேற்க தேர்வானது. அதையடுத்து மாணவர் பிரதாப், ஜப்பானுக்கு சென்று தனது கண்டுபிடிப்புடன் பங்கேற்றார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 120 பேர் அந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
முடிவில் 120 பேரில் இருந்து 4 பேருடைய கண்டுபிடிப்புகள் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் விருதும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களும்(இந்திய மதிப்பு படி ரூ.7 லட்சத்து 4 ஆயிரத்து 600) பரிசாக வழங்கப்பட்டன. அதில் மாணவர் பிரதாப்பும் ஒருவர் ஆவார். இந்த சாதனை மூலம் மாணவர் பிரதாப் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தண்ணீர் இருக்கும் இடத்தை...
இதுபற்றி மாணவர் பிரதாப் கூறியதாவது:-
பள்ளி பருவத்தில் இருந்தே விமானத்தை பார்க்கவும், அதன் ஒலியை கேட்கவும் ஆர்வமாக இருப்பேன். அதன்பிறகு இயற்பியலிலும், ரோபோடிக்சிலும் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வம்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. நான் நமது நாட்டுக்காக இன்னும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆவலோடு இருக்கிறேன்.
நான் தற்போது கண்டு பிடித்துள்ள டிரோன் கேமராவின் பெயர் ஆட்டோ பைலடெட் டிரோன் கேமரா ஆகும். இதன்மூலம் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எங்கு மீன்கள் அதிகமாக இருக்கிறது என்று கண்டறியலாம். மேலும் விவசாயிகள் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கும் இடத்தை துள்ளியமாக கண்டறிந்து அங்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கலாம். இவை மட்டு மல்லாமல் இன்னும் பல உதவிகளை இந்த டிரோன் கேமரா மூலம் பெறலாம்.
இவ்வாறு மாணவர் பிரதாப் கூறினார்.
Related Tags :
Next Story