நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா நீடிக்கும் அமித்ஷா நம்பிக்கை


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா நீடிக்கும் அமித்ஷா நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2018 5:00 AM IST (Updated: 20 Dec 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா நீடிக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா நீடிக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மாய கூட்டணி

2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதாக கூறுகிறார்கள். அது ஒரு மாய கூட்டணி. அப்படி ஒரு கூட்டணி உருவாகி இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

அந்த மாய கூட்டணியில் உள்ள அனைவரும் பிராந்திய தலைவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க மாட்டார்கள். உண்மை நிலவரம் என்னவென்றால், அவர்களுக்குள் கருத்து ஒற்றுமை கிடையாது.

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள் எங்களுக்கு கைகொடுக்கும். மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் மாநில தேர்தல் முடிவுகள் நிச்சயம் எங்களுக்கு சாதகமாக இல்லை. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். தோல்வி குறித்து ஆய்வு செய்வோம்.

ஒப்பிடக்கூடாது

ஆனால் மாநில தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட முடியாது. மாநில தேர்தல்களும், நாடாளுமன்ற தேர்தலும் வெவ்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நடக்கின்றன. இதனால் இரு தேர்தல்களையும் வெவ்வேறாகத் தான் பார்க்க வேண்டும்.

மக்களுக்காக உழைப்பதும், அது பற்றி அவர்களிடம் எடுத்து கூறுவதும் எங்களது கடமை. ஆனால் மக்களின் தீர்ப்பு பாதகமாக வரும்போது, அதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

2014-ம் ஆண்டு நடாளுமன்ற தேர்தலின் போது, நாங்கள் 6 மாநிலங்களில் தான் ஆட்சியில் இருந்தோம். தற்போது 16 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். நீங்களே சொல்லுங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?.

கூட்டணியில் சிவசேனா நீடிக்கும்

நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா எங்கள் கூட்டணியில் நீடிப்பது உறுதி. எங்களது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாநில அளவிலான சிவசேனா தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார். சிவசேனா எங்களது தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா நேற்று முன்தினம் மாலையே மும்பை வந்திருந்தார். அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து, மாநில அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

Next Story