திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கலெக்டருடன், மும்பை விஞ்ஞானிகள் ஆய்வு
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் மும்பை அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், மாவட்ட கலெக்டர் நடராஜனுடன் இணைந்து ஆய்வு செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவிலின் கிழக்கு பகுதியில் சரவண பொய்கை உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பொய்கையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புனித நீராடி செல்வது வழக்கம். மேலும் தினசரி மேளதாளங்கள் முழங்க யானை மற்றும் பரிவாரங்களுடன் சிவாச்சாரியார்கள் புறப்பட்டு பொய்கைக்கு சென்று ஒரு வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து வந்து திருமஞ்சன நிகழ்ச்சி நடந்து வருகிறது. இத்தகைய புனிதம் வாய்ந்த பொய்கையில் மீன் குஞ்சுகள் விட்டு அதை பிடிப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் பொய்கையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அதனால் புனிதநீர் மாசு படிந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் போதும் கோவில் நிர்வாகம் பொய்கையில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாக திருப்பரங்குன்றம் நகர் பகுதிக்குள் இருந்து மழைநீருடன் சாக்கடை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து பொய்கையில் கலந்தது. இதனையடுத்து முழுமையாக பொய்கை மாசு படிந்து சுகாதாரம் கேள்வி குறியானது. வெளியூரில் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக முதற்கட்ட பணியாக குப்பைகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் பொய்கையில் நீராடுபவர்கள் அரிப்பு ஏற்று அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே பொய்கையில் இருந்து முழுமையாக தண்ணீரை வெளியேற்றி தூர்வார வேண்டும் அல்லது பொய்கையின் தண்ணீரின் தன்மையை ஆய்வின் மூலம் கண்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் நேற்று மாவட்ட கலெக்டர் நடராஜன், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் சரவண பொய்கையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, “மாசு படிந்துள்ள திருப்பரங்குன்றம் சரவண பொய்கையை தூய்மைபடுத்தி புனிதம் காக்கும் விதமாக மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்தனர். அவர்கள் நீரின் தன்மை, குளத்தின் ஆழம் என்று பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கையை தயார்படுத்தி சமர்ப்பிக்க உள்ளனர். இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் பொய்கையை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளுவார்கள்“ என்றார்.