பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் உயிர் தப்பிய பெண் நோயாளி உருக்கம்


பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் உயிர் தப்பிய பெண் நோயாளி உருக்கம்
x
தினத்தந்தி 20 Dec 2018 5:30 AM IST (Updated: 20 Dec 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

காம்கார் அரசு ஆஸ்பத்திரி தீ விபத்தில் உயிர் பிழைத்த பெண் நோயாளி ஒருவர் தான் உயிர் தப்பியது குறித்து உருக்கமான தகவலை வெளியிட்டார்.

மும்பை, 

காம்கார் அரசு ஆஸ்பத்திரி தீ விபத்தில் உயிர் பிழைத்த பெண் நோயாளி ஒருவர் தான் உயிர் தப்பியது குறித்து உருக்கமான தகவலை வெளியிட்டார். மனைவியின் கதி தெரியாமல் பரிதவித்த கணவர் பற்றிய நெகிழ்ச்சியான தகவலும் தெரியவந்தது.

ஆஸ்பத்திரி தீ விபத்து

மும்பை அந்தேரி காம்கார் அரசு ஆஸ்பத்திரியில், 4-வது மாடியில் கடந்த திங்கட்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மும்பை நகரில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பெண் ஒருவர் பலியானார். இதனால் இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

பலியானவர்கள் பெயர் ஆர்த்தி கோதர்கர் (வயது48), அகிரெட்டி (72), தீர்த்தராஜ் குப்தா (70), பாபு அபித் கான் (65), மனிஷா (65) ஆஸ்ரம்மாக்ரே (68), சந்திரகாந்த் மாத்ரே (69), ஷீலா மர்வேகர் (65) மற்றும் 2 மாத குழந்தை என்பது தெரியவந்து உள்ளது.

இந்தநிலையில், மீட்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காம்கார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மீனா வர்மா (வயது40) என்ற பெண்ணும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தீ விபத்தின் போது, உயிர் தப்பியவர்களில் இந்த பெண்ணும் ஒருவர். தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமான ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் தான் அவர் இருந்தார்.

பெண் நோயாளி

மயங்கி கிடந்த அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர். தற்போது, ஜோகேஸ்வரியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்தில் தான் உயிர் தப்பியது பற்றி உருக்கமான தகவலை அவர் வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே நான்காவது மாடி முழுவதும் புகை பரவி விட்டது. அப்போது, அந்த வார்டில் 20 பேர் வரை இருந்தோம். புகை குபுகுபுவென புகுந்ததால் வார்டில் பீதி உண்டானது. உயிரை காப்பாற்றி கொள்வதற்காக ஓட்டம் பிடித்தோம்.

புகையால் தப்பிக்க வழி தெரியாமல் நான் உள்பட அந்த வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் அங்கும், இங்குமாக ஓடினோம்.

ஆனால் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். அப்போது, தீயணைப்பு படை வீரர் ஒருவர் மாடியில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைப்பதை பார்த்தேன். அவரை நோக்கி என்னால் செல்ல இயலவில்லை. அதற்குள் நானும் மயங்கி விழுந்து விட்டேன்.

மயக்கம் தெளிந்து பார்த்த போது, இன்னொரு ஆஸ்பத்திரியில் இருந்தேன்’’ என்றார்.

பதறினேன்

தீ விபத்து குறித்து மீனா வர்மாவின் கணவர் ராஜேந்திரா கூறியதாவது:-

‘காம்கார் ஆஸ்பத்திரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது, அருகில் உள்ள பூங்காவில் இருந்தேன். ஆஸ்பத்திரியின் மாடியில் இருந்து புகை வெளியேறியதை பார்த்ததும் பதறி அடித்து கொண்டு ஓடினேன். புகையின் காரணமாக என்னால் உள்ளே செல்ல இயலவில்லை.

இதனால் மனைவியின் கதி என்ன ஆனதோ என பதறினேன். என் மனைவி மாடியில் இருந்து மீட்கப்பட்டது கூட எனக்கு தெரியாது. மீட்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்து அங்கெல்லாம் சென்று விசாரித்தேன்.

அப்போது, எனது மனைவி ஜோகேஸ்வரி மாநகராட்சி ஆஸ்பத்திரியில் இருப்பதை பார்த்தேன். இதன் பின்னரே நிம்மதி அடைந்தேன்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

Next Story