பெரம்பலூர் அருகே வீடுகளில் போலி மதுபானம் தயாரித்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 4 பேர் கைது


பெரம்பலூர் அருகே வீடுகளில் போலி மதுபானம் தயாரித்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2018 5:00 AM IST (Updated: 20 Dec 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே வீடுகளில் போலி மதுபானம் தயாரித்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் கல்பாடி பிரிவு ரோடு அருகே ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக திருச்சி மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அந்த பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பெரம்பலூர் துறைமங்கலம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான அசோகன் என்பவரது மகன் கார்த்திக்(வயது 29) என்பவர், தனது வீட்டில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் உமாகாந்த்(31), காரைக்கால் வீரமாவூரை சேர்ந்த நடராஜன் மகன் நித்யானந்த்(31), காரைக் கால் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்த வினோத் குமார்(32) ஆகியோருடன் சேர்ந்து போலி மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கார்த்திக், வினோத்குமார், நித்யானந்த், உமாகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த, 3 ஆயிரத்து 500 குவாட்டர் மது பாட்டில்கள், கேன்களில் இருந்த ஸ்பிரிட், மது பானத்தை பாட்டிலில் அடைத்து மூடி போடும் எந்திரம், போலி மதுபான ஸ்டிக்கர், அட்டை பெட்டி, எசன்ஸ் மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலி மதுபானம் தயாரித்தவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு அரசு ஊழியரின் வீட்டை மாதம் ரூ.5 ஆயிரத்து 500-க்கு வாடகைக்கு எடுத்து, அதிலும் போலி மதுபானம் தயாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வீட்டை போலீசார் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையிட்டனர். அப்போது அங்கு தலா 100 லிட்டர் வீதம் அடங்கிய 2 பேரல்களில் போலி மதுபானம் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த போலி மதுபானம், ஆயிரத்து 500 பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் போலி மதுபானம், அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சையில் போலி மதுபானம் தயாரித்து கைதானவர்களுக்கும், தற்போது பெரம்பலூரில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் வேறேங்கும் போலி மதுபானம் தயாரிக்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகே போலி மதுபானம் தயாரித்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story