புதிய கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டும்; துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு


புதிய கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டும்; துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 20 Dec 2018 5:40 AM IST (Updated: 20 Dec 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

காலத்திற்கேற்ற புதிய கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

இந்திய பல்கலைக்கழகங்களுக்கான சங்கம் சார்பில் தென்மண்டல அளவிலான துணைவேந்தர்கள் மாநாடு புதுவையில் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா புதுவை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்று பேசினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். மேலும் அவர் பல்கலைக்கழக செய்தி மடலையும் வெளியிட்டார். அப்போது கிரண்பெடி பேசியதாவது:–

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் சக்தியை பயன்படுத்துவதில் பல்கலைக்கழகங்கள் அக்கறை செலுத்த வேண்டும். இளைஞர்களை தூய்மை இந்தியா, நீர்சேமிப்பு திட்டம், பசுமை திட்டத்தின்கீழ் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இளைஞர்களின் பங்களிப்போடு செயல்படுத்த பல்கலைக்கழகங்கள் முயற்சிக்கவேண்டும்.

அதோடு மாணவர்களிடம் புதிய சிந்தனை திறனும், கண்டுபிடிப்புகளும் மேம்பட வேண்டுமென்றால் காலத்திற்கேற்ற புதிய கல்வி திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களை கற்கும் திறன் உள்ளவர்களாக மாற்றுவதென்பது மிகப்பெரும் வாய்ப்பாகும். அதனால் கருணை உணர்வோடும், ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்போடும் பொதுநல சிந்தனையோடும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்களுக்கான சங்க தலைவரும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் சந்தீப்சன்சேட்டி உள்பட கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 68–க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் இந்திய பல்கலைக்கழகங்களுக்கான சங்கத்தின் இணை செயலாளர் அலோக்குமார் மிஸ்ரா, ஆலோசகர்கள் வீணா பால்லா, பிரதீப்குமார், புதுவை பல்கலைக்கழக இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், ராஜீவ்ஜெயின், நாடகவியல் துறை புலமுதன்மையர் ராமையா, பதிவாளர் சசிகாந்ததாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சித்ரா, செயற்பொறியாளர் சங்கரமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story