ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை: கிரிவலப்பாதையில் கோவிலை இடித்து கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ‘சீல்’ வைப்பு மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு


ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை: கிரிவலப்பாதையில் கோவிலை இடித்து கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ‘சீல்’ வைப்பு மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 2018-12-20T21:12:17+05:30)

ஐகோர்ட்டு உத்தரவின்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கோவிலை இடித்து கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.எம்.சிவபாபு. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாலி தீர்த்தம் அருகே இருந்த மார்கண்டேய கோவிலை வெங்கடேசன், ரமேஷ் உள்பட பலர் சேர்ந்து இடித்துவிட்டு அதில் கும்பகோணம் டிகிரி காபி கடையை வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா ‘கோவிலை இடித்தது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் தான், இப்போதும் அந்த வழக்கு உள்ளது என்றார். இதையடுத்து திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு உள்பட அதிகாரிகளை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிசேகவலு ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆஜரானார். வழக்கு குறித்து அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். மேலும் அந்த இடத்தில் காபி கடையுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டுள்ள காபி கடை உள்ள கட்டிடத்திற்கு ‘சீல்’ வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் தாசில்தார் மனோகரன், திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் கிரிவலப்பாதையில் காபி கடை கட்டப்பட்டு உள்ள கட்டித்திற்கு நேரில் சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கும், காபி கடைக்கும் வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மதியம் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் உரிமையாளர் காபி கடைக்கு எதிரே ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளதை மறைத்து மீண்டும் கடை நடத்தி வந்தார்.

இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி கட்டிடத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து கடையை அகற்றினார்.

Next Story