நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலம்


நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:45 AM IST (Updated: 20 Dec 2018 10:05 PM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தவறி விழுந்து மனைவி இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

கெங்கவல்லி, 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் ரவி (வயது 44), தொழிலாளி. இவருடைய மனைவி ராணி(40). இவர்களுக்கு பிரியா (23), பிரிந்தா (21) ஆகிய மகள்களும், பிரகாஷ்(19) என்ற மகனும் உள்ளனர். ரவி வேலைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று விடுவார். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்.

அதேபோல் கடந்த 3 மாதத்துக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின்பு கேரள மாநிலத்துக்கு கூலி வேலைக்காக சென்று விட்டு ஒரு வாரத்துக்கு முன்பு தான் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு ராணிக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவரை கூடமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ரவி மொபட்டில் அழைத்து சென்றார்.

பின்னர் திரும்பி வரும்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி கீழே கிடந்த கல்லை எடுத்து ராணியின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே ரவி, தனது மகன் பிரகாசை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘மொபட்டில் வரும் போது அம்மா தவறி கீழே விழுந்து விட்டார், தலையில் இருந்து ரத்தம் அதிகமாக வருகிறது, கட்டு போட, நீ ஒரு சேலையை எடுத்து கொண்டு வா என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வந்தவுடன் அம்மா இறந்து விட்டார் என்று கூறி உடலை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் ராணியின் சாவில், அவரது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்கள் நேற்று காலை கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரவி, போலீசாரிடம் மொபட்டில் வரும்போது, ராணி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக கூறினார்.

எனினும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மனைவியை கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு உள்ளது. அது எனக்கு பிடிக்கவில்லை.

இதனால் ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றேன். இதை மறைக்க மொபட்டில் இருந்து ராணி தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விட்டதாக நாடகமாடினேன் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை கைது செய்தனர். இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங் களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story