கன்னியாகுமரியில் மன்னர் கால தபால் பெட்டி திறப்பு: கடிதம் எழுத அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் கலெக்டர் பேட்டி


கன்னியாகுமரியில் மன்னர் கால தபால் பெட்டி திறப்பு: கடிதம் எழுத அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 10:20 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் மன்னர் கால தபால் பெட்டி திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அனைவரும் கடிதம் எழுத ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்.

கன்னியாகுமரி,

தற்போதைய நவீன உலகத்தில் இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்–அப் என்று தகவல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டது. கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்த தபால்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கடிதம் அனுப்ப பயன்படுத்தப்பட்ட தபால் பெட்டி குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்னும் நல்ல நிலையில் இருந்து வருகிறது. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இரணியல் பகுதியில் இருந்த தபால் பெட்டியை புதுப்பித்து, கன்னியாகுமரி பழைய பஸ் நிலையம் சந்திப்பில் பீடம் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தபால் பெட்டியை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே திறந்து வைத்து வாழ்த்து அட்டை அனுப்பினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ. ரேவதி, நாகர்கோவில் சப்–கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், பத்மநாபபுரம் சப்–கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, கன்னியாகுமரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அஞ்சல்துறை ஆய்வாளர் கணபதி, தாசில்தார் அனில்குமார், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தம்பி தங்கம், சுகாதார அதிகாரி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–

தபால்துறை நாட்டின் முக்கியமான துறைகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. நாம் அனைவருக்கும் முன்பு கடிதம் எழுதி அதை அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. தற்போது இன்டர்நெட், இ–மெயில் போன்ற நவீன தொழில்நுட்ப வசதியால் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டது. நாம் அனைவரும் கடிதம் எழுத ஆர்வம் காட்ட வேண்டும்.

கன்னியாகுமரி நாட்டின் முக்கிய இடம் மட்டுமின்றி தென்கோடி எல்லையாகவும் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடிதம், வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய வாழ்த்து அட்டைகள் அச்சிடப்பட்டு அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை வாங்கி அனுப்பலாம்.

நான் இங்கிருந்து குஜராத் மாநிலம் புஜ் மாவட்ட கலெக்டர், அருணாச்சல பிரதேசம் அஜீலா மாவட்ட கலெக்டர், காஷ்மீர் மாநிலம் லேகர் ஆகிய மூன்று மாவட்ட கலெக்டர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story