வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பு: அஞ்சல் அலுவலகங்களில் தபால்கள் தேக்கம்


வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பு: அஞ்சல் அலுவலகங்களில் தபால்கள் தேக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பதால் அஞ்சல் அலுவலகங்களில் தபால்கள் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம், 

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை 1.1.2016 முதல் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடைய போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கோட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தபால் பட்டுவாடா, ஆயுள் காப்பீட்டு வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அஞ்சல் அலுவலகங்களில் தபால்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் பாலமுருகன் கூறும் போது, ‘எங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் அஞ்சல் அலுவலகங்களில் தபால்கள் தேக்கம் அடைந்துள்ளன. கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(இன்று) வாழப்பாடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்‘ என்றனர்.

இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘மாவட்டத்தில் 47 துணை அஞ்சலகங்களும், 199 கிராம அஞ்சலகங்களும் உள்ளன. இதில் துணை அஞ்சலகங்களில் மாற்று ஏற்பாடு மூலம் தபால் பட்டுவாடா செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 75 கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்ப கூடிய தபால்கள் மட்டும் தேக்கம் அடைந்து பட்டுவாடா செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது விரைவில் சீராகிவிடும்‘ என்றனர்.

Next Story