சத்தியில் சாலையில் புழுதி பறப்பதால் அவதி பொதுமக்கள் மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு


சத்தியில் சாலையில் புழுதி பறப்பதால் அவதி பொதுமக்கள் மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

சத்தியில் சாலையில் புழுதி பறப்பதால் அவதியடைந்த பொதுமக்கள் மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதன்காரணமாக புழுதி பறப்பதால் பொதுமக்களால் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சத்தியமங்கலத்தில் உள்ள அத்தாணி ரோடு, வடக்குப்பேட்டை, அக்ரஹார வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.30 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், மக்கள் நல கூட்டமைப்பின் தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் தலைமையில் சத்தியமங்கலம் சந்தைப்பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரி மணிவண்ணன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அங்கு வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘சத்தியமங்கலத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் தார்சாலை போடப்படும். மேலும் புழுதிகள் பறக்காத வகையில் நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் ரோட்டில் தண்ணீர் தெளிக்கப்படும். தினமும் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ரோடுகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

Next Story