ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து, கொத்தாக மைனாக்கள் செத்து விழுந்ததால் பரபரப்பு
ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து, கொத்தாக மைனாக்கள் செத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூர் சந்தை வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டி வசித்து வருகின்றன. இதில் மரப்பொந்துகளில் குருவி வகையைச் சேர்ந்த மைனாக்களும் வசிக்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை மரக் கிளைகளில் அமர்ந்திருந்த 50-க்கும் மேற்பட்ட மைனாக்கள் திடீரென கொத்து, கொத்தாக செத்து கீழே விழுந்தன.
இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் சந்தை நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இறந்து கிடந்த மைனாக்களை அப்புறப்படுத்தினார்கள்.
சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினியின் 2.0 படத்தில் செல்போன் கதிர்வீச்சு காரணமாக ஏராளமான பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகள் இறந்ததாகவும், வருங்காலத்தில் இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல்தான் நேற்று கொடுமுடி அருகேயும் மைனாக்கள் திடீரென இறந்து விழுந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ‘சாலைப்புதூர் சந்தை வளாகத்தில் உள்ள மரப்பொந்துகளில் மைனாக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சந்தை வளாகத்தில் ஒருசில மைனாக்கள் இறந்து கிடந்தன. ஆனால் இன்று (நேற்று) மரக்கிளைகளில் அமர்ந்திருந்த ஏராளமான மைனாக்கள் கீழே விழுந்து இறந்துள்ளன.
கொடுமுடி அருகே சுமார் 200 மீட்டர் தொலைவில்தான் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக இந்த மைனாக்கள் இறந்ததா? அல்லது நோய் தாக்கி இறந்ததா? என்று தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு பறவைகளையும் பாதுகாக்க வேண்டும்’ என்றார்கள்.
Related Tags :
Next Story