விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும் - கோட்ட மேலாளர் தகவல்
விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. குறிப்பாக ரெயில் நிலைய முகப்பு பகுதி பொலிவுடன் இருப்பதற்காக நுழைவுவாயிலை அலங்கார வளைவு போன்று அமைக்கவும், பூங்கா அமைப்பதற்காகவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலைய வளாகத்திற்குள் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வசதியாக தார் சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்த திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய குமார்ரெட்டி, ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலை பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்கும்படியும், தரமான முறையில் சாலை அமைக்கவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் இருந்த விளம்பர பதாகைகள், தேவையற்ற இரும்புக்கம்பிகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இருந்ததை பார்வையிட்ட அவர், அந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்கும்படியும், இந்த மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலைய வளாகத்தில் பஸ்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பிறகு கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மக்களின் தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் வந்துசெல்ல வசதியாக ஒரு பாதையும், வெளியே செல்ல ஒரு பாதையும் ஏற்படுத்தப்பட்டு அங்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பஸ்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படுவதோடு, ரெயில் நிலையமும் புதுப்பொலிவு பெறும். ரெயில்வே நிர்வாகம், மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
விழுப்புரம்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் குறைந்த வேகத்தில் செல்கின்றன. இந்த ரெயிலின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சின்னபாபுசமுத்திரம் உள்ளிட்ட சில இடங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் இம்மார்க்கத்தில் செல்லக்கூடிய பயணிகள் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story