திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கல்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 5 பேர் கைது


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கல்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்களை பதுக்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பல்கலைக் கழகத்தின் துணை பதிவாளரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் அருகே வெட்டாறு செல்கிறது. இதன் கரையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் உள்ளன. இதில் பல மரங்கள், கடந்த மாதம்(நவம்பர்) வீசிய கஜா புயல் தாக்கியபோது, வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் கடத்தப்படுவதாக திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வெட்டாற்றங்கரையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த மரங்களை வனத்துறையினர் நேற்று முன்தினம் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக நீலக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம்(வயது 62) மற்றும் பல்கலைக்கழகத்தில் காவலாளிகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேக்கு மரங்களை கடத்தி பல்கலைக்கழக வளாகத்தில் பதுக்கி வைத்தது தொடர்பாக பன்னீர்செல்வம், பல்கலைக்கழக காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், பிளம்பர் தீனதயாளன், டிரைவர் கண்ணையன் ஆகிய 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்கள் நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் பன்னீர்செல்வம், தீனதயாளன், கண்ணையன் ஆகிய 3 பேரை வருகிற 3-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரை இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தேக்கு மரங்கள் பதுக்கல் விவகாரம் தொடர்பாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை பதிவாளர் வேலுவிடம் விசாரணை நடைபெற்று வருவதால் அவரிடம் இருந்த 5 பொறுப்புகள் பறிக்கப்பட்டு உள்ளன.

வனத்துறை அதிகாரிகளுக்கு மத்திய பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தின் பொறுப்பு அதிகாரியாக இருப்பதால் என்னிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே தேக்கு மர கடத்தல் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிகாரி அறிவொளி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story