பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்தது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்தது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 21 Dec 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி, 

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதில் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் படிகளில் யாரும் நடந்து செல்ல முடியாத அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் போலீசார் குளிக்க தடை விதித்தனர். இதனால் இங்கு குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குளிக்க அனுமதி

இந்த நிலையில் இரவு வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் இருந்து பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் மகிழ்ச்சியாக அருவியில் குளித்து சென்றனர்.

Next Story