நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறியுள்ளார்.
பூத்கமிட்டி கூட்டம்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் 3-வது மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நேற்று காலையில் நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, மாநகர் மாவட்ட பொருளாளர் அந்தோணி முத்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல் ராஜ், ரவி அருணன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், மேலிட பார்வையாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டார். அவர் பூத்கமிட்டி நிர்வாகிகளிடம் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
காங்கிரஸ் கூட்டணி
முன்னதாக சஞ்சய்தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டியினர்களிடம் நேரடியாக கலந்துரையாடி வருகிறேன். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. இதனை பார்க்கும் போது நாட்டு மக்களின் எண்ணம் மாறியுள்ளது. அவர்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ்நாட்டில் தினமும் ஆளும் கட்சி அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மக்கள் விரோத போக்கு
கஜா புயலால் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். ஆனால் இப்போது வரை பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. அவர் திரைப்பட நடிகர், நடிகைகள் திருமண நிகழ்ச்சி மற்றும் தொழில் அதிபர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவருக்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரம் இல்லை. தமிழக முதல்-அமைச்சரே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு பின்னர் தான் சென்று உள்ளார். இது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்களுக்கு நீதி கிடைக்கவும், விவசாயிகளுக்காகவும் போராடி வருகிறார். பூத்கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களின் ஆதரவை பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் உள்ளிட்ட இந்திய பொதுமக்கள் அனைவரும் நம்பிக்கையான ஆட்சியை எதிர் பார்க்கிறார்கள். ராகுல்காந்தியின் தலைமையினால் மட்டுமே அதனை கொடுக்க முடியும். எனவே ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வருவார். இதில் மாற்று கருத்து இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் அணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சகாயராஜ், மண்டல தலைவர் செந்தூர்பாண்டியன், மகளிர் அணி முத்து விஜயா, முன்னாள் மாவட்ட தலைவர் அருள், தூத்துக்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story