உயர் அழுத்த மின்கோபுரம் அமைய உள்ள விவசாய நிலங்களுக்கு 85 சதவீத இழப்பீடு கலெக்டர் தகவல்
உயர் அழுத்த மின்கோபுரம் அமைய உள்ள விவசாய நிலங்களுக்கு 85 சதவீத இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
பவர் கிரிட் நிறுவனம் சார்பில் சத்தீஷ்கர் மாநிலம் ரெய்காரில் இருந்து கரூர் மாவட்டம் புகளூர் வரை உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகாவுக்கு உள்பட்ட விவசாய நிலங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.
உயர் மின்கோபுரம் அமையும் இடத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு நில மதிப்பில் 85 சதவீத தொகையும், மின் கம்பிகள் (மின்பாதை) செல்லும் நிலங்களுக்கு நில மதிப்பில் 15 சதவீத தொகையும் இழப்பீடாக கணக்கீடு செய்யப்பட்டு வருவாய்த்துறை மூலம் பவர் கிரிட் நிறுவனத்திடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் விவசாய நிலங்களில் உள்ள தென்னை, தேக்கு, மா, பலா உள்பட அனைத்து வகை மரங்களுக்கும், வாழை, மஞ்சள், நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரூ.4 கோடி வங்கி கணக்கில் முன் பணமாக வரவு வைக்கப்பட்டு உள்ளது. எனவே மின் கோபுரங்கள் அமைய உள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனுக்குடன் பெற முடியாதோ? என விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை.
மேலும் இந்த மின் திட்டமானது தேசத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் நலனுக்கு அத்தியாவசியமானது என்பதால் மேற்படி திட்டத்திற்கான மின் கோபுரம் மற்றும் மின் பாதைகள் அமைக்க விவசாயிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.