மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: ஈரோட்டில் ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உயர் அழுத்த மின்கம்பிகள் வழியாக மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல இந்த பணிகள் நடக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் விவசாயிகள் குற்றம் சாட்டி வருவதோடு, விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரங்கள் வழியாக புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேற்கண்ட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 8 இடங்களில் கடந்த 17–ந்தேதியில் இருந்து போராட்டம் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் உயர் அழுத்த மின் கோபுரத்தின் படம் வரைந்த உருவ பொம்மையை, பாடையில் கட்டி அதை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் அந்த உருவ பொம்மையை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து தங்களது எதிர்ப்பை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.
விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 4–வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி முன்னிலை வகித்தார்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று விவசாயிகள் தங்களது ஆடு, மாடு, கோழிகளையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவைகளை அங்கு அமைக்கப்பட்டு உள்ள பந்தலின் முன்பு கட்டி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பினார்கள்.
முன்னதாக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
விவசாய விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்கக்கூடாது. அதற்கு பதிலாக சாலையோரங்களில் கேபிள் வழியாக மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே பல்வேறு இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலத்தின் மதிப்பும் குறைந்து விட்டது. அதற்கு முறையான இழப்பீடும், உயர் அழுத்த மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகள் அமைந்துள்ள இடத்துக்கு ஆண்டு வாடகையும் வழங்க வேண்டும். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தமிழக அரசு புறக்கணிக்கக்கூடாது.
ஒவ்வொரு விவசாயியும் உணர்வுப்பூர்வமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது உறவினர்களை மறந்து இரவு, பகல் என்று பாராமல் இங்கேயே தங்கி உள்ளனர். எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் கூடி ஆலோசனை செய்து பின்னர் கலந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கவின், போராட்டக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, கொங்கு பூபதி, சிவக்குமார், ராசு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.