அம்பை, பாவூர்சத்திரம் வழியாக நெல்லையில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரெயில் சென்னை வரை நீட்டிக்க பயணிகள் வலியுறுத்தல்
நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் வழியாக செங்கல்பட்டுக்கு சிறப்பு ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலை சென்னை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லை,
நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் வழியாக செங்கல்பட்டுக்கு சிறப்பு ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலை சென்னை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அம்பை-பாவூர்சத்திரம்
ரெயில்வே துறையில் தமிழகம் அதிக வருவாய் ஈட்டும் பகுதியாக உள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் இடம் கிடைப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்தளவுக்கு எத்தனை ரெயில்களை இயக்கினாலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிறப்பு ரெயில் இயக்கம்
இந்த நிலையில் சோதனை அடிப்படையில் இந்த வழித்தடத்தில் நெல்லை -செங்கல்பட்டு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் சேரன்மாதேவிக்கு 9.19 மணிக்கும், அம்பைக்கு 9.40 மணிக்கும், கீழக்கடையத்துக்கு 9.58 மணிக்கும், பாவூர்சத்திரத்துக்கு 10.19 மணிக்கும், தென்காசிக்கு 10.50 மணிக்கும், கடையநல்லூருக்கு 11.28 மணிக்கும், பாம்புகோவில் சந்தைக்கு 11.40 மணிக்கும், சங்கரன்கோவிலுக்கு நள்ளிரவு 11.53 மணிக்கும் வந்து சென்றது. தொடர்ந்து இந்த ரெயில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.45 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கம்
மறு மார்க்கத்தில் இந்த ரெயில் செங்கல்பட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு சங்கரன்கோவில், 6 மணிக்கு பாம்பு கோவில் சந்தை, 6.20 மணிக்கு கடையநல்லூர், 7.20 மணிக்கு தென்காசிக்கும், 8.08 மணிக்கு பாவூர்சத்திரம், 8.33 மணிக்கு கீழக்கடையம், 9.05 மணிக்கு அம்பை, 9.45 மணிக்கு சேரன்மாதேவி, 10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேருகிறது.
இந்த ரெயிலுக்கு நெல்லை-செங்கல்பட்டு இடையே தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.460, இருக்கை வசதி கொண்ட 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.225 ஆகும். இந்த ரெயிலில் பொதுப்பெட்டி கிடையாது.
பயணிகள் கோரிக்கை
இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அடிப்படையில் ரெயிலை நிரந்தரமாக இயக்க பரிசீலிக்கப்படும் என்ற அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் இந்த ரெயிலை சென்னை எழும்பூர் வரையோ அல்லது தாம்பரம் வரையோ நீட்டிக்க வேண்டும், மேலும் தினசரி ரெயிலாகவும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story