லால்குடி அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை நெரித்து தங்கச்சங்கிலி பறிப்பு


லால்குடி அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை நெரித்து தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை நெரித்து தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

லால்குடி,

லால்குடியை அடுத்த பூவாளூர் பத்துக்கட்டு தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவருடைய மனைவி அமுதா(வயது 36). இவர் நேற்று காலை அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள அவருடைய தந்தை வீட்டிற்கு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 மர்மநபர்கள் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் இறங்கி வந்து, திடீரென அமுதாவின் கழுத்தை நெரித்து, அவருடைய கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட அமுதா கையில் இருந்த சுடுதண்ணீர் பாத்திரத்தை கீழே போட்டுவிட்டு, தாலிச்சங்கிலியை கைகளால் பற்றிக்கொண்டார். இந்த போராட்டத்தில் தாலிச்சங்கிலி அறுந்து, பாதி சங்கிலி மர்மநபர் கையில் சிக்கியது. இதையடுத்து அவர் கையில் சிக்கிய தாலிச்சங்கிலியுடன், அருகே மொபட்டில் தயார்நிலையில் நின்ற மற்றொரு மர்ம நபருடன் சென்றார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த லால்குடி அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், சங்கிலியை பறித்த மர்மநபர்களை பிடிக்க மொபட்டை பின்தொடர்ந்தார். ஆனால் அவர்கள் கார் செல்ல முடியாத சந்துகளில் புகுந்து தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து அமுதா, லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க பூவாளூர் - சிறுகனூர் சாலையில் பத்துக்கட்டு தெரு நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story