விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பணி தீவிரம்


விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டை,

வருகிற 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்து விட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பணி விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டையில் உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாக துறை மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் வர்த்தக சங்க மகாலில் நடைபெற்றது. வர்த்தக சங்க துணை தலைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். செயலாளர் சங்கரநாராயணன் வரவேற்றார். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் காசீம் முன்னிலை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் அனுராதா, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கிய கேடு, பூமி ஆரோக்கிய கேடு, காற்று மாசு படுதல் போன்றவற்றால் குழந்தையின்மை ஏற்படுகிறது. மேலும் சூடான துரித உணவுகளை பிளாஸ்டிக் பையில் பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் டீ கப், டம்ளர், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் இலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக மரக்கூழ், கரும்பு சக்கை போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டவைகளை பயன்படுத்தலாம்.

மேலும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாற்றாக சில பொருட்களை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

திருச்சுழி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள சென்னிலைக்குடி, உடையனாம்பட்டி, காரேந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் மல்லிகா தொடங்கி வைத்தார், இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைக்கண்ணன், லலிதா, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் கருப்பையா மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பிச்சை செய்திருந்தார்.

Next Story