பெரம்பலூரில் ஆருத்ரா தரிசன விழா நாளை தொடக்கம்


பெரம்பலூரில் ஆருத்ரா தரிசன விழா நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 8:14 PM GMT)

பெரம்பலூரில் ஆருத்ரா தரிசன விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

பெரம்பலூர்,

வைஷ்ணவகடவுளான பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டில் 2 முறை பெரிய ஏகாதசி என்றழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் சிவனுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர தினத்தில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா நடத்தப்பட்டது. 2-வது முறையாக ஆருத்ரா தரிசன விழா அனைத்து சிவன் கோவில்களிலும் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 36-வது ஆண்டு திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசன விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை இரவு 10 மணிக்கு ஸ்ரீநடராஜபெருமானுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. பூஜைகளை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பரம்பரை ஸ்தானிக, சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்திவைக்கிறார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஸ்ரீநடராஜபெருமான்- சிவகாமி அம்பாள் ஆருத்ரா தரிசன வீதிஉலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், அரியலூர் உதவி ஆணையருமான முருகேசன், கோவில் நிர்வாக அலுவலர் மணி, நகர சோழிய வேளாளர் சங்க தலைவர் கணபதியாபிள்ளை, நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசம்வர்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 10.30 மணிக்கு ஸ்ரீசோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் யுவராஜ், செயல் அலுவலர் மணி, ஆருத்ரா தரிசன விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 

Next Story