உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட எதிர்ப்பு, ஊட்டியில் பா.ம.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரையில் மத்திய அரசின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும், அதிக விளைச்சலும் தரக்கூடிய புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பயன் அடைந்ததோடு, உருளைக்கிழங்கு விவசாயம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடக்கூடாது, தொடர்ந்து அங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதன்பிறகு ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் முத்தோரையில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தரமான, சுவையான, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, அதிக மகசூல் தரக்கூடிய புதிய உருளைக் கிழங்கு ரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் நீலகிரி விவசாயிகள் மட்டுமல்லாமல், மற்ற மலைப்பகுதி விவசாயிகளும் பயன் அடைந்து வந்தனர். இந்த ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட முடிவு செய்து உள்ளது. இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஒத்துழைப்பு அளித்தனர்.
சென்னையில் கடல் மீன் ஆராய்ச்சி பண்ணை, திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், கோவையில் கரும்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மூட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. தற்போது ஊட்டியில் இயங்கி வரும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தையும் மூட அரசு முடிவு எடுத்து உள்ளது. எனவே முதல்-அமைச்சர் தமிழகத்தின் உரிமையை இழக்காமல், ஆராய்ச்சி மையங்கள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க பசுமை புரட்சி, வெண்மை புரட்சி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது ஆராய்ச்சி மையங்களை மூடும் எண்ணம் அழிவை நோக்கி செல்கிறது. எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என்று தற்போதைய மத்திய அரசு கூறி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.25 விலை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை தான் விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கரும்புக்கு விலை உயர்வு வழங்காமல் உள்ளது. அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட கரும்பு 3-ல் ஒரு பங்கு தான் தற்போது விளைவிக்கப்படுகிறது. கூடலூர், பந்தலூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் தனியார் வன பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதால், அப்பகுதிகளில் நிலப்பட்டா வைத்து உள்ள விவசாயிகள் நிலத்தை விற்க முடியாமலும், விற்பனை செய்த பின்பு பின் தேதியிட்ட அறிவிப்பு வந்ததால் வாங்கிய நபருக்கு உரிமையில்லாதது போன்றும், நிலங்களை அடமானம் வைத்து விவசாய கடன் பெற முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தனியார் வன பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களின் கிலோ மீட்டர் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்துக் கழகம் பாதிப்பு ஏற்படும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்து பகுதிகளுக்கும் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் விசாலாட்சி, மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story