சாயல்குடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரூ.1 கோடி மாயம்


சாயல்குடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரூ.1 கோடி மாயம்
x
தினத்தந்தி 20 Dec 2018 11:15 PM GMT (Updated: 20 Dec 2018 8:43 PM GMT)

சாயல்குடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரூ.1 கோடி மாயமானது. இதுதொடர்பாக தனியார் நிறுவன பணியாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக மதுரையை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய வேனில் சென்றனர். அதில் 2 பாதுகாவலர்கள், டிரைவர், பொறுப்பாளர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பிவிட்டு 5-வதாக மற்றொரு ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக முதுகுளத்தூர் சென்றனர். அந்த வேனின் லாக்கரில் ரூ.1 கோடியே 20 லட்சம் இருந்தது. கடலாடி அருகே உள்ள மலட்டாறு முக்குரோட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் சென்றபோது, பணம் ஏற்றி சென்ற வாகனம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

வாகனம் விபத்தில் சிக்கியது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராமநாதபுரத்தை சேர்ந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். மேலும் சாயல்குடி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது வேனில் கொண்டு வந்த லாக்கரில் ரூ.20 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.1 கோடி மாயமானது தெரியவந்தது.

விபத்து குறித்தும், பணம் மாயமானது குறித்தும் வாகனத்தில் வந்த பணியாளர்களிடம் விசாரித்தபோது, கடலாடியில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தோம். திடீரென்று வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. வாகனம் கவிழ்ந்ததில் பணம் சிதறி இருக்கலாம். வங்கி அதிகாரிகள் கூறும்போது தான் பணம் மாயமானது தெரியும் என்றனர்.

ஆனால் அந்த வாகனத்தில் லாக்கர் பூட்டு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சாயல்குடி போலீசார் அந்த வாகனத்தில் இருந்த 2 பாதுகாவலர்கள், டிரைவர், பொறுப்பாளர் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரூ.1 கோடி மாயமானது குறித்து விசாரித்தார்.

Next Story