புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மோட்டார் சைக்கிள்களில் ‘ஜாலி ரைடு’ செல்வதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு


புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மோட்டார் சைக்கிள்களில் ‘ஜாலி ரைடு’ செல்வதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 9:31 PM GMT)

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மோட்டார் சைக்கிள்களில் ஜாலி ரைடு செல்ல தடை கோரிய வழக்கில், அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை கே.கே.நகரை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை வண்டியூர் கண்மாய் கரை சாலையில் கடந்த ஆண்டு நானும், எனது நண்பனும் நடந்து சென்றோம். அப்போது ‘ஜாலி ரைடு’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் எங்கள் மீது பயங்கரமாக மோதினர். இதில் என்னுடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கால், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் ஜாலி ரைடு என்ற பெயரில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்கிறார்கள். இவர்கள் சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் மீதும், பிற வாகனங்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இந்தநிலையில் இன்னும் சில நாட்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அந்த சமயத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அப்போது அவர்கள் விபத்துகளிலும் சிக்குகிறார்கள்.

2018-ம் ஆண்டு பிறந்தபோது நடந்த கொண்டாட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,144 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஜாலி ரைடு செல்வதை நிரந்தரமாக தடை செய்யவும், அதிவேகமாகவும், முறையற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து, அவர்களின் லைசென்சை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஜாலி ரைடு செல்வதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆஜராகி, “தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வாகனங்களுக்கு இடையே புகுந்து ஜாலி ரைடு செல்கிறார்கள். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதாடினார்.

முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story