ஏற்கனவே பிளவு ஏற்பட்டு விட்டது தி.மு.க. கூட்டணி தானாகவே உடைந்து விடும் - கோவை பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேச்சு
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே பிளவு ஏற்பட்டு விட்டது. எனவே கூட்டணி தானாகவே உடைந்து விடும் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
கோவை,
கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ரவிகுல திலகம் வரவேற்றார். கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது ஆன்மிகம். அதனை இந்து சமய அறநிலைய அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின்படி கோவில் வருமானத்தில் 12 சதவீதம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கோவில்களில் முறைப்படி பூஜை பரிகாரங்கள் செய்யவில்லை என்றால் கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சுத்தமல்லி நடராசர் கோவில் சிலை ரூ.62 கோடி மதிப்புள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிலை மீட்பு பணியில் பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். இவர் மீது புகார் கூற சில அதிகாரிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். இறுதியில் தர்மமே வெல்லும்.
கருணாநிதிக்காக பாராளுமன்றம், டெல்லி மேல்சபை என இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்திய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. இவரது சிலையை திறக்க சோனியா வை அழைத்தது ஏன்?. இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் தமிழின துரோகிகள். நரேந்திரமோடியை பற்றி ஸ்டாலின் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட இயக்கத்திற்கு எதிராக போராட நான் தயார். தி.மு.க. கூட்டணியை உடைக்க நான் ஏன் முயற்சிக்க வேண்டும். அதில் ஏற்கனவே பிளவு ஏற்பட்டு விட்டது. அது தானாகவே உடைந்து விடும்.
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலை வைத்து பா.ஜனதாவின் செல்வாக்கை நிர்ணயிக்க கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்றால் எளிதில் வெற்றி பெறலாம்.
நாடு முழுவதும் மின்கம்பம் செல்கிறது. இதனை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். மின்சார வெட்டு இல்லை என்ற நிலையை உருவாக்கியது மத்திய மின்சார திட்டத்தின் மூலமாகத்தான். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்தது. ஆனால் மோடி ஆட்சியில் ஊழலே இல்லை. ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த அரசின் புதிய ஒப்பந்த அடிப்படையில் பெட்ரோல் விலை ரூ.12 வரை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில், பா.ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் மற்றும் தேவராஜ், சரவணன், செய்தி தொடர்பாளர் சபரி கிரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story