நீலகிரியில், 1-ந் தேதி முதல் ஓட்டல்கள், பேக்கரிகள் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்


நீலகிரியில், 1-ந் தேதி முதல் ஓட்டல்கள், பேக்கரிகள் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்
x
தினத்தந்தி 20 Dec 2018 9:45 PM GMT (Updated: 20 Dec 2018 9:46 PM GMT)

ஓட்டல்கள், பேக்கரிகள் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நீலகிரியில் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உணவு வணிகம் செய்யும் மொத்த- சில்லறை வணிகர்கள்( ஓட்டல், பேக்கரி உள்பட உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள்) தாங்கள் மேற்கொள்ளும் உணவு வணிகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை உரிமம் மற்றும் பதிவு மேற்கொள்ள அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி வரைவோலையாக செலுத்தி வந்தனர். ஆனால் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஆன்லைன்(இ-பேமெண்ட்) மூலமாக கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆன்லைன் மூலம் உரிமம் மற்றும் பதிவு கட்டண தொகையை செலுத்தி, புதியதாக உரிமம் மற்றும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் அனைவரும் உரிமம் மற்றும் பதிவை புதுப்பித்துக்கொள்ள ஆன்லைன் முறையில் தான் கட்டண தொகை செலுத்த முடியும். கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற முறையில் ஆன்லைன் மூலமாக உரிமம், பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி வரைவோலை மூலம் உரிமம், பதிவு கட்டணம் செலுத்தும் முறையானது வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் வரைவோலை மூலம் செலுத்தும் முறை அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே அனைத்து உணவு வணிகர்களும் ஏற்கனவே வரைவோலை மூலம் கட்டண தொகை செலுத்தி கைவசம் வைத்திருப்பவர்கள் உரிமம், பதிவு மேற்கொள்ள உடனடியாக 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முன்பு உரிமம், பதிவு பெற்றவர்கள் தற்போது புதுப்பிக்கும் காலக்கெடுவானது 30 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் தற்போது 4 மாதங்களுக்கு முன்பே(அதாவது காலாவதியாகும் நாளில் இருந்து 120 நாட்களுக்கு முன்னதாகவே) விண்ணப்பித்து கொள்ளலாம். 30 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்காதவர்கள் அபராத தொகை ரூ.100(நாள் ஒன்றுக்கு) ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

உணவு வணிகர்கள் foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில் உரிமம் மற்றும் பதிவில் உள்ளடு செய்து, தாங்களாகவே விண்ணப்பிக்கலாம். அல்லது அரசு இ-சேவை மையம் மற்றும் தனியார் பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தையோ, நீலகிரி மாவட்ட நியமன அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story