கூடலூரில் நெகிழ்ச்சி: மன நோயாளியை குளிப்பாட்டி சுத்தம் செய்த வாலிபர்கள்


கூடலூரில் நெகிழ்ச்சி: மன நோயாளியை குளிப்பாட்டி சுத்தம் செய்த வாலிபர்கள்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மன நோயாளியை குளிப்பாட்டி வாலிபர்கள் சுத்தம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூடலூர்,

கேரள, கர்நாடக மாநிலங்கள் மற்றும் தமிழக எல்லைகள் இணையும் பகுதியில் கூடலூர் உள்ளது. இதனால் அண்டை மாநில மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று, திரும்புகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மன நோயாளிகள் பரவலாக சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். பகல் மற்றும் இரவில் கொட்டும் பனியிலும் சாலையோரங்களில் படுத்து கிடக்கின்றனர். இதனால் அவர்கள் சுகாதாரமற்ற நிலையில் உலாவுகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் காளம்புழா பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், நேற்று முன்தினம் காலையில் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு மன நோயாளியை பிடித்தனர். பின்னர் முடி திருத்தம் செய்து, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினர். மேலும் அவர் அணிந்து இருந்த அழுக்கு துணிக்கு பதிலாக புதிய துணியை வாங்கி உடுத்தி விட்டனர்.

தொடர்ந்து அந்த மன நோயாளிக்கு உணவு வாங்கி கொடுத்தனர். இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து வாலிபர்கள் கூறும்போது, ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித்திரியும் மனநோயாளிகளை அந்தந்த பகுதி மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தினால், அவர்களும் நல்ல மனிதர்களாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்றனர்.

Next Story