விவசாய கடன் தள்ளுபடி தேதியை அறிவிக்க கோரிக்கை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா
விவசாய கடன் தள்ளுபடி தேதியை அறிவிக்க கோரி கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எடியூரப்பாவின் குறுக்கீடு
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி குமாரசாமி கடன் தள்ளுபடி குறித்து பேசினார்.
அப்போது, “தேசிய வங்கிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. ஆனால் இதற்கு தேசிய வங்கிகள் ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றன. இதில் எடியூரப்பாவின் குறுக்கீடு உள்ளது. அவர் அந்த வங்கிகளை தடுக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
தர்ணா போராட்டம்
இதை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்று முன்தினம் மாலையில் சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சுவர்ண சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர்.
விவசாய கடன் தள்ளுபடி
முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். எடியூரப்பா மீது கூறியுள்ள குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும், இதற்காக முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும், தேசிய வங்கி விவசாய கடன் தள்ளுபடி தேதியை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
இதற்கிடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, “விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் கடனை தள்ளுபடி செய்யவில்லை. தேசிய வங்கி கடன் தள்ளுபடியை நான் தடுப்பதாக குமாரசாமி சொல்வது தவறு. நான் அத்தகைய செயலில் ஈடுபடவில்லை. என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை குமாரசாமி வாபஸ் பெற வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்யும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்” என்றாா்.
கடும் அமளி
தர்ணாவில் ஈடுபட்ட பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், சபையில் கூச்சல்-குழப்பம் உண்டாகி கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபையை சபாநாயகர் ரமேஷ்குமார் தள்ளிவைத்தார்.
சபை மீண்டும் பகல் 1 மணிக்கு கூடியது. அப்போதும், பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். இருக்கையில் போய் அமரும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். இதை உறுப்பினர்கள் ஏற்கவில்லை. சபையில் அமளி நீடித்ததால், சபையை பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
சபை நடவடிக்கைகள்
அதன்படி சபை பிற்பகல் 3 மணிக்கு கூடியபோதும், பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். அவர்கள் கோஷங்களை எழுப்பியதால், சபையில் மீண்டும் கூச்சல்-குழப்பம் நீடித்தது. இதையடுத்து சபையை சபாநாயகர், நாளைக்கு (அதாவது இன்று) காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார்.
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பா.ஜனதா இன்றும் தனது தர்ணா போராட்டத்தை நடத்தும் என்று சொல்லப்படுகிறது.
அதே போல் கர்நாடக மேல்-சபையிலும் விவசாய கடன் தள்ளுபடி தேதியை அறிவிக்க கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை மற்றும் மேல்-சபை ஆகிய சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் முடங்கியது.
வெறிச்சோடிய விதானசவுதா
சட்டசபை கூட்டத்தொடருக்காக கர்நாடக அரசின் ஒட்டுமொத்த உயர் அதிகாரிகளும், பெலகாவியில் முகாமிட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக அங்கிருந்து தான் அரசு நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால் தலைநகர் பெங்களூருவில் உள்ள விதான சவுதா அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Related Tags :
Next Story