பா.ஜனதா விருந்தில் பங்கேற்ற மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதவியை பறிக்க காங்கிரஸ் முடிவு


பா.ஜனதா விருந்தில் பங்கேற்ற மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதவியை பறிக்க காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 21 Dec 2018 4:15 AM IST (Updated: 21 Dec 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கலந்து கொண்டார். இதனால் அவரது மந்திரி பதவியை பறிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பெங்களூரு, 

பா.ஜனதா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கலந்து கொண்டார். இதனால் அவரது மந்திரி பதவியை பறிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து வேறுபாடு

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நகரசபை நிர்வாகத்துறை மந்திரியாக இருப்பவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர் பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் பெலகாவி நிலவள வங்கி தலைவர் தேர்தலில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடைேய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கு இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது.

ரமேஷ் ஜார்கிகோளி அதிருப்தி

இதனால் மாநில காங்கிரஸ் தலைவர்கள் அதில் தலையிட்டு பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்தனர்.ஆனால், பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதாகவும், அவர் உடனே இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எச்சரிக்கை விடுத்தார். இதன் காரணமாக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து நிலவியது. ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து இந்த பிரச்சினையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலையிட்டு, தீர்வு கண்டார். ஆனாலும், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தொடா்ந்து அதிருப்தியில் உள்ளார். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் தலையீடு நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மனரீதியாக தயாராகிவிட்டேன்

இந்த நிலையில் முதல்- மந்திரி குமாரசாமியை பெலகாவியில் சந்தித்து பேசிய மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, “பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் தலையீடு அதிகரித்து வருகிறது. அதனால் நான் காங்கிரசை விட்டு விலக மனரீதியாக தயாராகிவிட்டேன். என்னால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வராது. ஆட்சிக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அது மற்றவர்களால் தான் ஏற்படும்” என்றார்.

இந்த நிலையில் மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசியலில் பரபரப்பு

ஆனால் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி அந்த விருந்தை புறக்கணித்துவிட்டார். அதே நேரத்தில் பா.ஜனதா சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்தில் ரமேஷ் ஜார்கிகோளி கலந்துகொண்டார்.

இதன் மூலம் அவர் பா.ஜனதாவுக்கு செல்வது உறுதி என்று சொல்லப்படுகிறது. இதனால் மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளியை நீக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story