பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பெண்கள் டெல்லி நோக்கி பேரணி 24 மாநிலங்கள் வழியாக செல்கிறார்கள்
பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் மும்பையில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
மும்பை,
பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் மும்பையில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பெண்கள் 24 மாநிலங்கள் வழியாக செல்கிறார்கள்.
கண்ணிய பேரணி
நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பாலியல் குற்றங்களை ஒடுக்க சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களை சமுதாயத்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், அவர்களுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ராஷ்டிரிய கரிமா அபியான் என்ற தன்னார்வ அமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்ட முடிவு செய்தது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி ‘டிக்னிட்டி மார்ச்' (கண்ணிய பேரணி) என்ற பெயரில் பிரமாண்ட பேரணியை நடத்த முடிவு செய்தது.
5 ஆயிரம் பெண்கள்
அதன்படி இந்த பேரணி நேற்று மும்பை சுன்னாப்பட்டி சோமையா மைதானத்தில் இருந்து தொடங்கியது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பேரணியை நடிகைகள் திஸ்கா சோப்ரா, சுதாசந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். திராவக வீச்சு தாக்குதலுக்கு எதிரான அமைப்பை சேர்ந்த லட்சுமி அகர்வால், கும்பல் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவரும், சமூக ஆர்வலருமான பன்வாரி தேவி உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி சுமார் 10 ஆயிரம் கி.மீ. பயணமாக நாட்டின் 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 200 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்கள் வழியாக பேரணி செல்லும்போது, ஆங்காங்கே இன்னும் ஏராளமான பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு பாலியல் கொடுமைக்கு ஆளான 5 ஆயிரம் பெண்கள் டெல்லியை நோக்கி படையெடுக்கிறார்கள்.
பாலியல் கொடுமைக்கு ஆளானவர்கள் இவ்வாறு ஒன்றுதிரண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த பேரணி 65 நாட்கள் பயணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தலைநகர் டெல்லியை சென்றடைகிறது.
ஆதரவு கரம் நீட்டுங்கள்...
முன்னதாக பேரணி குறித்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது கும்பல் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பன்வாரி தேவி கூறியதாவது:-
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளி உலகில் தலைகாட்ட முடியவில்லை. உரிய மரியாதை கிடைப்பதில்லை. நாங்களும் பெண்கள் தான். எங்களது பெண்மையையும், கண்ணியத்தையும் காக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருவதால், அரசின் கவனத்தை ஈர்க்க இந்த பேரணியை நடத்துகிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் ஓடி ஒளிந்து கொள்ளாமல் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். எங்களுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய பிரதேச சிறையில் கற்பழிப்புக்கு ஆளான பெண் ஒருவர் கூறுகையில், “நான் எங்கு சென்றாலும் என்னை சமூகம் புறக்கணிக்கிறது. தனிமைப்படுத்துகிறார்கள். இந்த துயரம் தொடரக்கூடாது. எங்களுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.
இந்த பேரணி மூலம் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை மாறும் என்று மற்றொரு ஆர்வலர் கூறினார்.
Related Tags :
Next Story