காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் வெட்டிக்கொலை மனைவி கண்முன்னே பரிதாபம்


காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் வெட்டிக்கொலை மனைவி கண்முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 21 Dec 2018 5:15 AM IST (Updated: 21 Dec 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் அவரது மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மும்பை, 

காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் அவரது மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கல்லூரியில் காதல்...

பீட் பகுதியை சேர்ந்தவர் சுமித் வாக்மாரே(வயது25). இவர் அங்குள்ள ஆதித்யா பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு, அந்த கல்லூரியில் படித்து வரும் பாக்யஸ்ரீ என்ற மாணவியுடன் காதல் மலர்ந்தது.

இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பாக்யஸ்ரீ, சுமித் வாக்மாரேயை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தார். எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆயிரம், ஆயிரம் கனவுகளுடன் காதல் தம்பதியினர் தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்கினர். அங்குள்ள வாடகை வீட்டில் குடியேறி வசித்தனர்.

தேர்வு எழுதினர்

அவர்களது திருமணம் நடந்து ஒன்றரை மாதம் முடிந்து இருந்தது. திருமண வாழ்க்கையில் இணைந்த அவர்கள் கல்லூரி தேர்விலும் வெற்றி பெறுவதற்காக படித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் சுமித் வாக்மாரேவும், அவரது மனைவியும் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினர்.

பின்னர் தேர்வு முடிந்து இருவரும் கல்லூரியில் இருந்து வெளியே வந்தனர். இன்னும் சற்று நேரத்தில் தங்களது காதல் திருமண வாழ்க்கை சிதைய போகிறது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

கல்லூரிக்கு வெளியே காரில் இருந்த 2 பேர் சுமித் வாக்மாரேவை ஏதோ கேட்பது போல் அழைத்தனர்.

வெட்டி சாய்ப்பு

இதனை நம்பி அவர் அவர்களை நோக்கி சென்றார். அப்போது, அந்த ஆசாமிகள் இருவரும் தாங்கள் காரில் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

இதில், சுமித் வாக்மாரே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தன் கண்முன்னேயே காதல் கணவர் வெட்டி சாய்க்கப்பட்டதை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியில் உறைந்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித் வாக்மாரேயை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அவரை காப்பாற்றும்படி உதவிகேட்டு அலறினார். அங்கு திரண்ட கல்லூரி மாணவர்கள் உடனடியாக சுமித் வாக்மாரேயை மீட்டு பீட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் போராட்டம்

தகவல் அறிந்த போலீசார் சுமித் வாக்மாரேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளில் ஒருவர் மாணவி பாக்யயின் அண்ணன் பாலாஜி லாண்டே என்று தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட சுமித் வாக்மாரேயின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story