காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து: சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் காயம் அடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மும்பை,
காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் காயம் அடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
ஆஸ்பத்திரி தீ விபத்து
மும்பை அந்தேரியில் உள்ள காம்கார் ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அன்றைய தினத்தில் மட்டும் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். தீ விபத்தில் காயம் அடைந்த சுமார் 175 பேர் 7 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
இதில் 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இவர்களில் செவ்வாய்க்கிழமை அன்று 2 பேரும், நேற்றுமுன்தினம் பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.
பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தீ விபத்தின் போது, பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கிஷான் நர்வடே(வயது65) என்ற முதியவர் அந்தேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
தீ விபத்தின் போது காயம் அடைந்த குழந்தைகள், தீயணைப்பு படையினர் உள்பட இன்னும் 116 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story