பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல் 90 பேர் கைது
பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி லால்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், 2017-18-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகை மற்றும் 2016-17-ம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் மா.ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கதவணை கட்ட நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்தி கட்டுமானப்பணியை உடனடியாக தொடங்க வேண்டும். சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதலாக பணம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகளின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலையில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைக்காட்டியில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், பாரதி, நஜீமுதீன், முத்துராமலிங்கம், ஜெயராமன், நாகராஜன், மணிவண்ணன், செந்தமிழ்செல்வன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர்கள் காட்டுமன்னார்கோவில் ஷியாம்சுந்தர், குமராட்சி வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 90 பேரை போலீசார் கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றி, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story