திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். இந்த பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட செயலாளர்கள் சசிகுமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல செயலாளர் மாணிக்கவாசகம் கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் கிராமப்புறங்களில் வருவாய்த்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். மாறுதல் கோரிய அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் பல்லடம், தாராபுரம், ஊத்துக்குளி, உடுமலை, திருப்பூர் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story