முதலுதவி பயிற்சி சான்றிதழ் போலியாக விற்பனை: மேலும் சிலருக்கு போலீஸ் வலைவீச்சு பரபரப்பு தகவல்கள்
முதலுதவி பயிற்சி சான்றிதழை போலியாக தயாரித்து விற்கப்பட்ட வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டில் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. 1915-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு தமிழகம் முழுவதும் 119 கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் நோக்கம் பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி பெற்றவர்களை கொண்டு புயல், வெள்ளம், சுனாமி மற்றும் பொதுவான அனைத்து உயிர் பிரச்சினைகளுக்கும் முதலுதவி செய்து உயிர்களை காப்பாற்றுவதாகும்.
முதலுதவி செய்வதற்கான பயிற்சி சான்றிதழ்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ்களை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்கத்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்கள் கண்டிப்பாக பெற வேண்டும். முதலுதவி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்ப மனு கொடுப்பவர்கள் ரூ.350 கட்டணம் செலுத்த வேண்டும்.
சூரிய நாராயணன்
விண்ணப்ப மனு கொடுப்பவர்களுக்கு 8 நாட்கள் பயிற்சி அளிப்பார்கள். அதன்பின்னர் முறையான தேர்வு நடைபெற்று, அதில் வெற்றி பெற வேண்டும். பிறகு டாக்டர் ஒருவர் ஒப்புதலின் பேரில், முதலுதவி சான்றிதழ் கொடுப்பதற்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பார்கள்.
டெல்லி அலுவலகம் தான் முதலுதவி கொடுப்பதற்கான சான்றிதழ்களை முறைப்படி வழங்கும். 3 வருடங்களுக்கு மட்டும் இந்த சான்றிதழ் தகுதி பெற்றதாகும். இவ்வளவு முறையான விதிமுறைகள் முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற கடைப்பிடிக்கப்படுகின்றன. மயிலாப்பூரில் உள்ள கிளை நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய சூரியநாராயணன் (வயது 54) என்பவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார்
இந்தநிலையில் சூரியநாராயணன் தனியாக செயல்பட்டு போலியாக முதலுதவி பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் அமைப்பு சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மனு மீது சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவின்பேரில், ஐ.ஜி. ஸ்ரீதர், சூப்பிரண்டு பிரவீண்குமார் அபினவ் ஆகியோர் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தீவிர விசாரணைக்கு பிறகு புகார் கூறப்பட்ட சூரியநாராயணன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
மேலும் சிலருக்கு வலைவீச்சு
தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள சூரியநாராயணன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
கைது செய்யப்பட்ட சூரியநாராயணன் சட்டவிரோதமாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்து, போலியாக முதலுதவி பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சூரியநாராயணனுக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முதலுதவி பயிற்சி போலி சான்றிதழ்கள் விற்பனை மூலம் சூரியநாராயணன் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story