பாறைக்குழியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


பாறைக்குழியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கே.எம்.நகரில் பாறைக்குழியை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை, கிளை செயலாளர்கள் சந்திரசேகர், கதிரேசன், வாசு ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மாநகராட்சி உதவி பொறியாளர் கவுரிசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மண்டல உதவி ஆணையாளர் கண்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

கே.எம்.நகர் முத்தையன் லே-அவுட் பகுதியில் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் குப்பைகள் நிரம்பிய பாறைக்குழி உள்ளது. துர்நாற்றம், பூச்சி தொல்லை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த பாறைக்குழியை மண் கொண்டு மூட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தெரிவித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பாறைக்குழியை உடனடியாக மண் கொண்டு மூட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை முறைப்படுத்தி 4 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும்.

வெள்ளியங்காடு 60 அடி ரோடு பகுதியில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்த உதவி ஆணையாளர் கண்ணன், கே.எம்.நகர் பாறைக்குழியை மண் கொண்டு மூடுவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பாறைக்குழியை மண் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் தாமதமாகிறது. இதை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாலை வசதி, தெருவிளக்கு பராமரிப்பு, சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். இதைத்தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இதன்காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story