திருப்பூரில் டாக்டரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றது 5 பேர் கொண்ட கும்பல் - தனிப்படை போலீசார் சென்னையில் விசாரணை


திருப்பூரில் டாக்டரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றது 5 பேர் கொண்ட கும்பல் - தனிப்படை போலீசார் சென்னையில் விசாரணை
x
தினத்தந்தி 20 Dec 2018 10:00 PM GMT (Updated: 20 Dec 2018 11:58 PM GMT)

திருப்பூரில் டாக்டரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 

திருப்பூர் ஆண்டிப்பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(வயது 75). டாக்டர். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் ஆயுர்வேத கிளனிக் வைத்துள்ளார். இவருடைய மனைவி சாஜிதேவி(70). கடந்த 18-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்த 2 பேர் ஸ்ரீதரன் வீட்டுக்குள் நுழைந்து சாஜிதேவியை ஒரு அறையில் அடைத்து விட்டு, ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது ஸ்ரீதரனின் கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி ஓடினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துரத்திச்சென்று மர்ம ஆசாமிகளில் ஒருவனை மடக்கி பிடித்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஸ்ரீதரன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட ஆசாமி சென்னையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்து ள்ளது. ஒருவர் சிக்கியதால் 4 பேர் தப்பி விட்டார்கள். இந்த கும்பலில் திருப்பூரை சேர்ந்த ஒருவரும் உள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து இந்த கும்பல் திருப்பூர் வந்து கைவரிசை காட்ட முயன்றுள்ளது. இந்த கும்பல் திருப்பூருக்கு ஏற்கனவே வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் சென்னை சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட கொள்ளை கும்பல் மீது கொலை, கொள்ளை வழக்குகள் சென்னையில் இருப்பதும் தெரியவந்து இருக்கிறது. தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story