கொலைவழக்கில் ஆதாரமின்றி 3 பேர் கைது இன்ஸ்பெக்டர் மீது மானநஷ்ட வழக்கு தொடரலாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோர்ட்டு உத்தரவு
ஆதாரமின்றி கொலை வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மீது, பாதிக்கப்பட்டவர்கள் மானநஷ்ட வழக்குத்தொடர கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேலூர்,
பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கடந்த 25.12.2012 அன்று இரவு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி என்பவர் பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் 26.3.2014 அன்று சுமார் 1¼ வருடத்திற்கு பிறகு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததாகவும், அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கீழாச்சூர் கிராமத்தைசேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜேஷ்குமார் (வயது 28), பிச்சாண்டி மகன் மதிவாணன் (24), ராஜேந்திரன் மகன் பிரசாந்த் (22) என்பது தெரியவந்ததாகவும், அவர்கள் கீழாச்சூரில் விவசாய நிலத்தில் பெண் கொலைசெய்யப்பட்டதை இவர்கள் 3 பேரும் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் கூறி 3 பேரையும் கைது செய்தார்.
மேலும் அவர்களை கைதுசெய்தபோது 1¼ வருடத்திற்கு முன்பு கொலைசெய்ய பயன்படுத்திய கயிறு, இரும்பு ராடு ஆகியவற்றை வைத்திருந்ததாகவும், அதை கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணை 3 பேரும் கடத்திவந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதற்கு மறுத்ததால் அவரை கொலைசெய்ததாகவும் 3 பேரும் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் (விரைவு கோர்ட்டு) நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.குணசேகரன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவித ஆதாரத்தையும் சேர்க்கவில்லை, கொலை செய்யப்பட்ட பெண் யார்?, எங்கிருந்து கடத்தி வரப்பட்டார் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இணைக்கவில்லை.
கொலை செய்யப்பட்டு 1¼ வருடத்திற்கு பிறகும் கொலை செய்ய பயன்படுத்திய பொருட்களை அவர்கள் வைத்திருததாக கூறியிருப்பதால் இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி 3 பேரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 3 பேரும் இன்ஸ்பெக்டர் மார்ட்டின்பிரேம்ராஜ் மீது உரிய நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத்தொடர்ந்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதி குணசேகரன் கூறி உள்ளார். இன்ஸ்பெக்டர் மார்ட்டின்பிரேம்ராஜ் தற்போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.